துப்புரவு பணியாளர்களுக்கு மரியாதை செய்த பரங்கிப் பேட்டை மக்கள்!

ஏப்ரல் 09, 2018 587

பரங்கிப் பேட்டை (09 ஏப் 2018): பரங்கிப் பேட்டையில் துப்புரவு பணியாளர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்துள்ளனர் ஊர் பொதுமக்கள்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, இந்த ஊரில் பஞ்சாயத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் அயராத உழைப்பினால், பரங்கிப்பேட்டை தூய்மையாகக் காணப்படுகிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஊரை சுத்தப்படுத்தும் பணியில் சிரத்தை எடுத்து பணிபுரியும் அவர்களுக்கு மரியாதை செய்து அவர்களை கவுரவப் படுத்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.

இதற்காக திருமண மண்டபம் ஒன்றில் 'தர்மம் செய்வோம்' என்ற அமைப்பினர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். துப்புரவு பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களை குடும்பத்தினருடன் இதற்காக அழைத்தனர். நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை பஞ்சாயத்து அலுவலர்களும் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களின் பணியைப் பாராட்டினர். பரங்கிப்பேட்டை பஞ்சாயத்து சுகாரதார ஆய்வாளர் நடராஜன், துப்பரவுப் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், துயரங்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சி முடிவில், தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து அளித்து உபசரிக்கப் பட்டது.

துப்புரவு பணியாளர்கள் என்றாலே உதாசீனப் படுத்தும் உலகில் ஒரு ஊரே சேர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்து விருந்து அளித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...