அபுதாஹிருக்கு ஏதேனும் நேர்ந்தால் தமிழக அரசே பொறுப்பு - ஜவாஹிருல்லா!

April 15, 2018

கோவை (15 ஏப் 2018): உடல் நலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரும் அபுதாஹிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "கோவை சிறையில் ஆயுள்தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்ட வசீர், ரிஸ்வான், தஸ்தகீர், சபீர் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இருசிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள அபுதாகிர் என்ற கைதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அபுதாகிரை தமிழக அரசு இது வரை விடுதலை செய்யவில்லை. தற்போது அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரது சிகிச்சைக்கான செலவுகளை ஏற்று உள்ளோம். அபுதாகிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும். அபுதாகிருக்கு நிரந்தரமாக பரோல் கொடுக்க வேண்டும், அல்லது அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது அறிவிக்கப்பட்டது ஆனால் இதுவரை யாரையும் தமிழக அரசு விடுவிக்க வில்லை." என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு எந்த அபுதாஹிரை விடுவிக்காததால் தமிழக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்றும் ஜவாஹிருல்லா கூறினார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!