ஆசிரியை நிர்மலா தேவி வீட்டின் பூட்டைஉடைத்து கைது!

April 16, 2018

விருதுநகர் (16 ஏப் 2018): மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய அருப்புக் கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப் பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.

இந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார். ஆனால் நிர்மலா தேவியின் பேச்சுக்கு மாணவிகள் இணங்க மறுத்தனர்.

இந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியை நிர்மலாதேவியை கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று அந்தக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறையின் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கல்லூரியின் செயலர் காவல்துறையிடம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் காவல்துறை நிர்மலா தேவியின் மீது வழக்குகளைப் பதிவுசெய்திருப்பதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதி தெரிவித்தார்.
இதையடுத்து நிர்மலா தேவியின் வீட்டிற்கு நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் சென்றபோது, அவர் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு வெளியில் வர மறுத்தார். இதனால், அவரது உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். கணவர் சரவண பாண்டியனும் சகோதரர் மாரியப்பனும் அங்கு வந்தவுடன் வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலா தேவியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!