நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் கவர்னர் மாளிகைக்கு தொடர்பு உண்டா?

April 16, 2018

சென்னை (16 ஏப் 2018): மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய அருப்புக் கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரத்திற்கும் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளதாகவும் இதனை தீர விசாரிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.

மேலும் அந்த ஒலிநாடாவில், ஆளுநர் மாளிகைக்கு நெருக்கமானவர்கள் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர் சந்தானம் விசாரணை நடத்துவார் என ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆளுனர் என்ற வகையில் இந்த நடவடிக்கையை ஆளுனர் மேற்கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.

இதற்கிடையே ஆளுநரின் சமீபத்திய நியமனங்களை விசாரிக்க வேண்டுமெனவும் மத்திய அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைத் திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!