கர்நாடக காவியின் தூதுவர் இந்த ரஜினி: பாரதிராஜா விளாசல்!

ஏப்ரல் 16, 2018 526

சென்னை (16 ஏப் 2018): நடிகர் ரஜினி கர்நாடக காவியின் தூதுவர் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஐ.பி.எல் போட்டிகளைச் சென்னையில் நடத்தக் கூடாது என்றும் அது போராட்டத்தின் நிலையை மாற்றிவிடும் என்றும் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம், தங்கர் பச்சான், கெளதமன் எனத் திரையுலகைச் சார்ந்த பலரும் சேர்ந்து 'தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை' சார்பில் சென்னை அண்ணாசாலையில் சென்ற வாரம் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது சிலர் போலீசை தாக்கியது போல் ஒரு வீடியோ வெளியாகியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி, சீருடை அணிந்திருக்கும் காவலரைத் தாக்குவது உச்சகட்ட வன்முறை. இப்படித் தாக்குபவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்" என ட்வீட் வெளிட்டிருந்தார். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் ரஜினிக்கு, இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எது வன்முறையின் உச்சகட்டம். இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா, நியூட்ரினோவுக்கு எதிராகப் போராடினீர்களா. மீத்தேன் பற்றி பேசினீர்களா. காவிரிக்காக ஒன்றுகூடியத் தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறை என்கிறீர்கள்’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "ரஜினி ஒரு கர்நாடகக் காவியின் தூதுவர், தமிழனின் ரத்தத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நீங்கள் எங்களுக்கு வன்முறையாளர்கள் பட்டம் கட்டுவதா. "என்னப் பேசுகிறோம் என்று உணர்ந்து பேசுங்கள், இல்லையேல் தமிழர்களால் ஒதுக்கப்படுவீர்கள். இந்த நிகழ்வைக் கறைப்படுத்த நினைத்த ஒருவன், செய்த செயல்பாட்டுக்கு நாங்கள் வருந்துகிறோம். நடந்த போராட்டம் தனி மனிதருக்கானது அல்ல. உங்களுடைய உணவுக்கும் குடி நீருக்கும் சேர்த்துதான்" என்றும் பாரதிராஜா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...