நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து - ராமதாஸ் அதிர்ச்சி தகவல்!

ஏப்ரல் 18, 2018 725

சென்னை (18 ஏப் 2018): கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக ஈடுபடுத்தும் முயற்சியில் இறங்கிய பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகரத்தில் பெருந் தலைகளை காப்பாற்ற நிர்மலா தேவியின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்விப்பதற்காகச் சில மாணவிகளுக்கு வலைவீசப்பட்டது தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பும் அதில், அவர் அளித்த விளக்கங்களும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு மாறாக அதிகரித்துள்ளன. எந்த வகையிலும் அதிகாரமற்ற விஷயத்தில் ஆளுநர் தலையிடுவது கண்டிக்கத்தக்கது.

பாலியல் வலை விவகாரத்தில் ஆளுநர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு முற்றிலும் தேவையற்றது. தமிழகத்தை உலுக்கிய இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளிகள் யார் என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். அதற்காக நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுதான் நானும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் பயனாளி ஆளுநர்தான் என்று எந்தத் தலைவரும் குற்றம்சாற்றவில்லை. இத்தகைய சூழலில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட வினாவை எளிதாகக் கடந்து போயிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல், "எனக்கு 78 வயதாகிவிட்டது. எனக்கு பெயரன், பெயர்த்திகள் மட்டுமின்றி, கொள்ளுப் பெயரன்களும் உள்ளனர்" என்று பதிலளித்து சுய பச்சாதாபம் தேடும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டது, எதற்காக இந்த நாடகம் என்ற ஐயத்தைதான் அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. பெரும்பான்மை வலிமை இல்லாத அரசு ஆட்சியில் தொடர்கிறது; பினாமி அரசுமீது 24 ஊழல் குற்றச்சாற்றுகள் அடங்கிய 206 பக்கங்கள் கொண்ட புகார் பட்டியலை கடந்த டிசம்பர் 9-ம் தேதி பா.ம.க வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது; காவிரிப் பிரச்னையில் மத்திய அரசின் துரோகங்களைக் கண்டித்து வரலாறு காணாத போராட்டங்களைத் தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. இதுகுறித்தெல்லாம் விளக்குவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாத ஆளுநர், மாணவிகளுக்குப் பாலியல் வலை வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பெரிய மனிதர்கள் யார் என்ற சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளிக்க வேண்டிய தேவை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

ஏற்கெனவே நான் கூறியதைப் போன்று இந்த விஷயத்தில் ஆளுநர் தலையிட முடியாது. ஏனெனில், இது பல்கலைக்கழகம் சார்ந்த விஷயமல்ல. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 4 மாணவிகளை அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள சிலருக்கு பலியாக்க முயன்ற, மன்னிக்கவே முடியாத குற்றம் சார்ந்த விஷயமாகும். இது ஒரு தனியார் தன்னாட்சி கல்லூரியின் மாணவிகளைச் சீரழிக்க அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நடத்திய நாடகம். இதற்கும் பல்கலைக்கழகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தனியார் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம், தேர்வு மதிப்பீடு ஆகியவற்றில் மட்டும்தான் பல்கலைக்கழகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக, இதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகளில் தலையிட பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கோ வேந்தரான ஆளுநருக்கோ எந்த அதிகாரமும் இல்லை. ஒருவேளை பல்கலைக்கழக வளாகத்திலேயே இத்தகைய பாலியல் சுரண்டல் நடந்திருந்தால்கூட, அது தொடர்பாகப் பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள்தான் இக்குற்றத்தை விசாரிக்க முடியும்.

அதுமட்டுமின்றி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் பதவிகளில் உள்ள சிலர் அல்லது அவர்களின் அதிகார மற்றும் பதவித் தேவைகளை நிறைவேற்றும் நிலையில் உள்ளவர்களுக்காகத்தான் அப்பாவி மாணவிகளை வேட்டையாட முயற்சிகள் நடந்துள்ளன. அதுமட்டுமின்றி, தங்களையே இழக்க முன்வரும் மாணவிகளுக்கு காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று நிர்மலா தேவி ஆடியோ பதிவில் கூறியுள்ள நிலையில், இதன் பின்னணியில் பல்கலைக்கழகம்தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது. அந்த வகையில் பல்கலைக்கழக உயரதிகாரிகள், துணைவேந்தர், வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர் ஆகியோர்தான் பாலியல் சுரண்டல் குற்றச்சாற்றுகளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், காமராஜர் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோஹித், துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா ஆகியோர் நீதிபதிகளாகச் செயல்பட்டு விசாரணைக்கு ஆணையிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது சட்டத்தையும் நீதியையும் கொச்சைப்படுத்தும் செயலாகவே அமையும்.

கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடமிருந்து 3 செல்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பல்வேறு பெரிய மனிதர்களைத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும் 60-க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல பெரிய மனிதர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட நிர்மலா தேவி, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு துணிச்சல் உண்டா என்று சவால் விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்துதான் நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் ஆணையிட்டுள்ளார். இது குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே தவிர, அவர்களைத் தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல.

இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் துணைவேந்தர் முதல் ஆளுநர் வரை அனைவருமே, இந்த அவலச் செயலை நிர்மலாதேவி மட்டுமே செய்ததாகவும், அதில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என்பது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இது உண்மை அல்ல. காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் பதவியில் உள்ள ஒருவர் இந்த விஷயத்தில் மோசமானவர் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்களே குற்றம்சாற்றுகின்றனர். உண்மை அவ்வாறு இருக்கும்போது நிர்மலா தேவியைப் பலிகடாவாக்கி விட்டு, அதிகார உச்சியில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்றும் சதிதான் இதுவாகும். இந்தத் சதித்திட்டத்தில் நிர்மலாதேவியின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம்."

இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...