அமைச்சர் விஜய பாஸ்கர் லஞ்சம் - சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஏப்ரல் 26, 2018 511

சென்னை (26 ஏப் 2018): தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர் விஜய பாஸ்கர் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச் சாட்டை அடுத்து இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டு வந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் லஞ்சம் வாங்கினார் என்றும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கு தொடங்கியதிலிருந்து இதற்கு சி.பி.ஐ விசாரணை தேவையில்லை எனத் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு வந்தது. அப்போது, `தமிழக அரசின் இந்தப் பதில்தான் தன்னை மேலும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்' எனத் தோன்றுவதாக இந்திரா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அதிகாரிகள் பலருக்குத் தொடர்புள்ள நிலையில், இதை ஏன் சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதன் பின் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 26-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...