ஜெயலலிதா இருந்திருந்தால் டெல்லியே ஆடியிருக்கும் - செங்கோட்டையன்!

ஏப்ரல் 28, 2018 518

முசிறி (28 ஏப் 2018): ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் டெல்லியே ஆடிப்போயிருக்கும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் முசிறியில், காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய செங்கோட்டையன் பேசியதாவது:

தந்தை பெரியார், அண்ணா ஆகியோரது வழியில் எம்.ஜி.ஆரால் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. லட்சிய பயணத்தை மேற்கொண்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் நடைபெற்று கொண்டிருக்கின்ற ஆட்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். 1974-ல் காவிரி ஒப்பந்தத்தை தி.மு.க. அரசு புதுப்பிக்க தவறியதால் தான் காவிரி நதிநீர் பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது தி.மு.க. சரியாக செயல்பட்டிருந்தால் தற்போது இந்த போராட்டம் தேவையில்லை. ஒப்பந்தத்தை தி.மு.க. புதுப்பிக்காததால் நாம் 310 டிஎம்.சி தண்ணீரை பெற முடியவில்லை.

ஸ்டாலின் நடைபயணம் வெற்றி பெறாது. அதனை முறியடிக்கும் சக்தியாக அ.தி.மு.க இருக்கும். ஸ்டாலின் செயல்தலைவராக மட்டுமே இருப்பார். தலைவராக ஆக முடியாது. கூட்டுறவு தேர்தல் மட்டுமல்ல உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலையும் எதிர்கொள்ளும் திறனுடன் அ.தி.மு.க. உள்ளது. கச்சத்தீவை தாரை வார்த்ததும், முல்லைபெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தாததும் தி.மு.க. செய்த மிகப்பெரிய தவறு. தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரை பெற்றுத்தர 84 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே ஒப்பற்ற தலைவி ஜெயலலிதாதான். அவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை பெற்று தந்தார். டெல்லிக்கு ஜெயலலிதா செல்லும்போது எல்லா தலைவர்களையும் சந்திப்பார்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நிலையில் இன்று ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் டெல்லியே கலங்கி போய் இருக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை நமது போராட்டம் ஓயாது. நமது நோக்கத்தை மத்திய அரசுக்கு உணர்த்தும் விதமாக கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறோம். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருகிறது என்பதற்காக மத்தியஅரசு காலதாமதப்படுத்தி கொண்டு வருகிறது. வருகிற மே 3-ந்தேதி காவிரி நதிநீர் தொடர்பாக வெளிவர உள்ள தீர்ப்பு திருப்புமுனையை ஏற்படுத்தும். அது அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும்.

தமிழக வரலாற்றில் இந்த இயக்கத்தில் இருந்து யார் பிரிந்து சென்றாலும் கவலைப்பட தேவையில்லை. இந்த இயக்கத்தை யாரும் சிதைத்துவிட முடியாது. பிரித்துவிட முடியாது. ஜெயலலிதா இருந்தவரை நம்மோடு இணைந்து பணியாற்றியவர்கள் இன்று தனித்து இயங்குகின்றனர். அ.தி.மு.க. இயக்கத்தை தமிழகம் உள்ளவரை எவராலும் வெல்லமுடியாது. அ.தி.மு.க.வின் லட்சிய பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...