பட்டுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் மோதல் - மூன்று பேர் கொலை!

மே 01, 2018 1117

பட்டுக்கோட்டை (01 மே 2018): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மூன்று பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை அருகே மஞ்சவயல் என்ற கிராமம் உள்ளது. அங்கு நேற்று இரவு சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது. விழாவின்போது அதே கிராமத்தைச் சேர்ந்த இரு கோஷ்டியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக உருவெடுக்காமல் இருக்க பெரியவர்கள் சேர்ந்து தடுத்துவிட்டனர். இருவேறு கோஷ்டியினரை சமாதானப்படுத்த திங்கள்கிழமை இரவு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் கட்டைகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் பிரதீப், சிவநேசன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். மேலும் தாக்குதலில் பலத்த காயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் கண்ணா என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த பிரதீப்பும்-ராஜேஷ் கண்ணாவும் உடன்பிறந்த சகோதரர்கள் என கூறப்படுகிறது. மோதல் நடைபெற்ற அப்பகுதியில் பதட்டமான சூழல் தொடர்ந்து நிலவுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...