டாஸ்மாக் கடைகளை மூட முடியாது - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

மே 01, 2018 694

சென்னை (01 மே 2018): நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்னர் அந்த கடைகளை வேறு இடங்களில் மாநில அரசு திறந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

வகை மாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள கடைகளை முட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருப்பதால் 815 கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்தது.

நகராட்சிகளில் மதுக்கடைகளை திறந்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு மாறாக சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...