ராகுல் காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பின் பின்னணி!

மே 02, 2018 715

புதுடெல்லி (02 மே 2018): விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வரும்படி ராகுல் காந்திக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மதவாத சக்திக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை அவரிடம் தெரிவித்தேன். மேலும், தலித் வன்கொடுமை சட்டத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சி காட்டிய எதிர்வினைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்’ என்றார்.

முன்னதாக திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற தெருவில் தலித் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பின்பு 2-வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியையும் திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...