எஸ்.வி. சேகரை கைது செய்யாதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

மே 03, 2018 700

சென்னை (03 மே 2018): பெண் பத்திரிகையாளர்கள் மீது தரக்குறைவாக பதிவிட்ட எஸ்வி சேகரை கைது செய்யாதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, பத்திரிகையாளர்கள் பலர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

அதன் பின்னர் எஸ்.வி.சேகர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில் அவரை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டும் போலீஸார் கைது செய்யவில்லை.

இந்நிலையில் ஜாமீன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி சேகரை ஏன் கைது செய்யவில்லை? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி அதிருப்தியை தெரிவித்தது. மேலும் ‘‘இந்த விசாரணை சரியான முறையில் நடைபெறுவதாக நாங்கள் கருதவில்லை. ஏனென்றால் இத்தனை இடை மனுதாரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. என்று கூறி நீதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...