வெளி மாநிலங்களில் நீட் தேர்வு - மாணவர்கள் கவலை!

மே 04, 2018 766

சென்னை (04 மே 2018): வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருப்பதற்கு மாணவர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (‘நீட்’) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்துகிறது.

அந்தவகையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.எஸ்.இ. ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தான் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருப்பதற்கு மாணவர்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். `நாங்கள் படிக்காத சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வு நடத்தப்படுவது ஒரு சோகம் என்றால், தேர்வு மையத்தை தெரியாத இடத்தில் வைத்து விட்டு அங்கே சென்று தேர்வு எழுது என்பது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நான் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தபோது மூன்று இடங்களை தேர்வு செய்யச் சொன்னார்கள். முதலில் நெல்லையைத் தேர்வு செய்தேன். அடுத்தடுத்த இடங்களாக மதுரை மற்றும் திருச்சியைத் தேர்வு செய்தேன்.

ஆனால், நான் தேர்வு செய்த நகரங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் எர்ணாகுளம் நகரில் தேர்வு மையத்தை போட்டிருக்கிறார்கள். இடையில் உயர்நிதிமன்றத் தீர்ப்பு வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அதையும் உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களாகவோ அல்லது கம்ப்யூட்டரோ தேர்வு மையத்தை தேர்வு செய்யும் என்றால் என்னிடம் மூன்று இடங்களைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர்களாகவே விரும்பிய இடத்தை போட்டுவிட வேண்டியது தானே? எனக்காவது பரவாயில்லை. ராஜஸ்தானில் தேர்வு மையமாகப் போடப்பட்டிருக்கும் மாணவர்களை நினைத்தாலே கவலையாக இருக்கு’’ என்று தெரிவித்தனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...