எஸ். வி.சேகர் சாதாரண மனிதர்தான் நடவடிக்கை எடுங்கள் - நீதிமன்றம் விளாசல்!

மே 10, 2018 889

சென்னை (10 மே 2018): சாதாரண மனிதர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை எஸ்வி சேகர் மீதும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, பத்திரிகையாளர்கள் பலர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் குவிந்தன. மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து மனு செய்தன.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்தவுடன் முன் ஜாமீனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இந்த வழக்கில் சாதாரண மனிதருக்கு எதிரான புகார் மீது என்ன நடவடிக்கையோ அதை காவல்துறை எடுக்கலாம் என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதன் மூலம் எஸ்.வி.சேகரை கைது செய்யும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. கைது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்திருப்பதாலும், ஏற்கனவே உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பதாலும் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளதாக சட்டநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்த விசாரனை இன்று நடைபெற்றது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ‘‘இந்த விசாரணை சரியான முறையில் நடைபெறுவதாக நாங்கள் கருதவில்லை. ஏனென்றால் இத்தனை இடை மனுதாரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.

சாதாரண மனிதர் மீது புகார் அளிக்கப்பட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை இந்த வழக்கில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த வழக்கில் அதுபோன்று நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? இந்த வழக்கில் காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை’’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...