மதுவை ஒழிக்க தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பிளஸ் டூ மதிப்பெண்!

மே 17, 2018 1184

சென்னை (17 மே 2018): தந்தையின் மது அடிமைத்தனத்திற்கு எதிராக மதுவை ஒழிக்க வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட மாணவன் தினேஷ் பிளஸ் டூ தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த அவர், கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட தினேஷ், தற்கொலைக்கு முன் தனது தந்தைக்கு மனமுடைந்த நிலையில் எழுதிய கடிதத்தில், ``அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்தக் காரியமும் செய்யக் கூடாது. இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால்தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தினேஷ் மரணம், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவன் தினேஷ் நல்லசிவன் எடுத்துள்ள மதிப்பெண் விவரம் தெரியவந்துள்ளது. அவர் 1024 மார்க் எடுத்துள்ளார்.

மாணவன் தினேஷின் மதிப்பெண்ணை பார்த்து குடும்பமே கதறி அழுதுகொண்டு இருக்கிறன. எப்படியெல்லாம் கல்வி கற்று சமூகத்துக்கு உதவ வேண்டும் என்ன நினைத்தான். ஆனால் இப்படி உயிரை மாய்த்துக் கொண்டானே என்று தினேஷின் உறவினர்கள் சொல்லி அழுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...