தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி தந்தது யார்? எடப்பாடி திணறல்!

மே 24, 2018 853

சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:

துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்?

பதில்: துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி என்பதே இங்கு இல்லை. உங்களை ஒருவர் அடித்தால் உடனடியாக அதனை தடுப்பதற்கான வழியை தான் செய்வீர்கள். இதுதான் இயற்கை. ஆகவே இதனை யாரும் திட்டமிட்டு செயல்படுவது கிடையாது. இப்படியெல்லாம் சம்பவம் நடைபெறும் என்று நினைத்தால் முன்னெச்சரிக்கையாக கைது செய்வார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் போராட்டம் நடைபெறும் போது அமைதியாக ஊர்வலம் சென்று மாவட்ட ஆட்சியிரிடம் தங்களது குறைகளை கூறி செல்வார்கள். அரசுக்கு தெரிவிப்பார்கள். அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். ஆகவே தொடர்ந்து அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதை சில அரசியல் கட்சித் தலைவர்களும், சில சமூகவிரோதிகளும் ஊடுருவி இதனை ஒரு தவறான பாதையில் அழைத்துச்சென்ற காரணத்தினால் தான் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேள்வி: தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்காதது ஏன்?

பதில்: மக்களை சென்று சந்திக்கவில்லை என்று சொல்வது தவறான குற்றச்சாட்டு. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவில் பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது. ஆனால் ஒரு சில விஷமிகளோ, அரசியல் கட்சிகள் தலைவர்களும் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பயன்படுத்தி இப்படி ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது நடக்கக்கூடாது என்பதற்கு தான் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஸ்டாலின் போய் சந்தித்து வந்துள்ளார். முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும். அங்கு அமைதி நிலவ வேண்டும், இயல்பு நிலை திரும்ப வேண்டும், மக்கள் அச்சத்தை போக்க வேண்டும். பொதுச்சொத்துக்கு எந்த வித சேதமும் விளைவிக்கக்கூடாது என்பதற்குத் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: துப்பாக்கி சூடு நடத்துவதற்கான காரணம் என்ன?

பதில்: நாங்களும் இங்கே தான் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும் போது அமைதியான முறையில் தான் நடத்தினார்கள். ஆனால் இந்த முறை அப்படி அல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு சில அரசியல் கட்சித் தலைவர்கள் சில சமூகவிரோதிகளும் இதில் ஊடுருவி இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே அன்று ஊர்வலம் வந்தவர்கள் அங்கே உள்ள காவல்துறையினரை தாக்கிய பிறகு முதலில் காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசினார்கள், பின்னர் தடியடி நடத்தினார்கள். அதையும் மீறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் இருக்கும் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. அதற்கு அருகாமையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அங்குள்ள வாகனத்திற்கு தீ வைத்து விட்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இவை அனைத்தையும் தொலைக்காட்சிகளில் பார்த்து தான் நாங்களும் தெரிந்துகொண்டோம். இப்படிப்பட்ட மோசமான, பதட்டமான சூழலில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...