தூத்துக்குடியின் தற்போதைய நிலவரம்!

மே 24, 2018 766

தூத்துக்குடி (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. மேலும் கமாண்டோ படை குவிக்கப் பட்டுள்ளது.

"துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடியில், நேரடி ஒளிபரப்புக்குத் தேவையான செய்தி சேனல்களின் OB வாகனங்கள் இரண்டு நாள்களாக அனுமதிக்கப்படவில்லை. இன்றுதான் இந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 100 நாள்களாகப் போராடும் மக்கள் பலரும், வேலைகளுக்குச் செல்லாமல் போராடி வருகின்றனர்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளுமே திறக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் பலரும் உணவுக்கு என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் உள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற அன்று கைதுசெய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர், என்ன ஆனார்கள்... எங்கு இருக்கிறார்கள் என்பது அவர்களின் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. இன்று 65 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்திருக்கிறது. அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு மருந்துகள் உள்ளிட்டவை முறையாகக் கிடைக்கின்றன.

தூத்துக்குடி, அண்ணாநகர் பகுதியில் கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களைப் பதப்படுத்துவதற்காக பாளையங்கோட்டைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். தூத்துக்குடி அரசுப் பொது மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை காரணமாகவே பாளையங்கோட்டைக்கு எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உயிரிழந்தவரின் உறவினர்கள், '12 பேரின் உடல்களைப் பதப்படுத்த இடமில்லை எனச் சொல்வதை நம்ப முடியவில்லை' என்றனர்.

நிருபர்கள் இருவரும், சகாயபுரம் பகுதியில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது குண்டடிபட்டு விழுந்து கிடந்தவர்களை, அங்கு இருந்த பொதுமக்கள் தூக்கிச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் தடியடி அதிகரிக்கவே தூக்கிச் சுமந்தவர்களை அருகில் இருந்த இடங்களில் இறக்கிவிட்டு அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இப்படி பல குழப்பங்களும் பதற்றங்களும் நிறைந்தே இருக்கிறது தற்போதைய தூத்துக்குடி நகரம்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...