தூத்துக்குடி பரபரப்புக்கிடையே ஜெயலலிதா ஆடியோ எதற்கு?

May 26, 2018

சென்னை (26 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நிலவி வந்த குழப்பங்களுக்கு பிறகு ஓ.பி.எஸ் - சசிகலா தலைமையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அது, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதாவது இறப்பதற்கு 68 நாள்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் மூச்சுத்திணறலின்போது ஜெயலலிதா பேசிய 52 வினாடிகள் கொண்ட அந்த ஆடியோவில், முதலில் மருத்துவர் சிவகுமாரிடமும், பின்னர் மருத்துவர் அர்ச்சனாவிடமும் ஜெயலலிதா பேசுகிறார்.

ஜெயலலிதா : oh sad எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க.

சிவக்குமார் : vlc ரெக்கார்டு

ஜெயலலிதா : கேக்குதா

சிவக்குமார் : பெருசா இல்லை.

ஜெயலலிதா : அப்போ இருந்தபோது கூப்பிட்டேன். அப்போ எடுக்க முடியலனு சொன்னீங்க. எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு நீங்களும் செய்றீங்க... எடுக்க முடியலான விடுங்க.

சிவக்குமார் : சரி

இதேபோல் மருத்துவமனையில் அர்ச்சனாவிடம் பேசிய ஆடியோவில்

ஜெயலலிதா : நல்லா வருது, மூச்சு விட முடியல, தியேட்டர்ல முன்னாடி சீட்டுல விசில் அடிக்கிற மாதிரி ரத்த அழுத்தம் இருக்கு. எனக்கு எவ்வளவு ரத்த அழுத்தம் இருக்கு

மருத்துவர் அர்ச்சனா : 140 / 80

ஜெயலலிதா : it's ok for me. இது நார்மல் தான்

இவ்வாறு அந்த ஆடியோ முடிவடைகிறது.

தூத்துக்குடி பரபரப்புக்கிடையே தற்போது வெளியாகியுள்ள இந்த ஆடியோ நிலமையை திசை திருப்பும் முயற்சி என்றும் இது இப்போது அவசியமா? என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Search!