ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் - பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

மே 31, 2018 598

சென்னை (31 மே 2018): பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசிய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில்," தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்திப்பதற்காக தூத்துக்குடிக்கு சென்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் தான் செய்தியாளர்கள் பணி. கேள்விகள் கேட்பதற்காக மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதும் அநாகரிக செயல். இதை அனுமதிக்க முடியாது. வரம்பு மீறி வார்த்தை விட்டதற்கு ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்." என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் யார் நீங்க? 100 நாள் வராமல் தற்போது ஏன் இங்கு வந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் ரஜினி கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்தற்கு சமூக விரோதிகளே காரணம் என குற்றம்சாட்டினார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார் ரஜினிகாந்த். தொடர்ந்து அவரை நோக்கி பாய்ந்த கேள்விக்கணைகளால் ஒரு கட்டத்தில் நிதானமிழந்த அவர் நிருபர்களை பார்த்து மிரட்டும் தொனியில் ஏய் வேறு ஏதாவது கேள்விகள் இருக்கா என ஆவேசமாக கத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...