தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் புகார்!

ஜூன் 02, 2018 734

தூத்துக்குடி (02 ஜுன் 2018): தூத்துக்குடி கலவரம் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களை பொய்யான புகார் அளிக்க அரசு அதிகாரிகள் நிர்பந்திக்க கூடாது என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் கோபால் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், கலவரம் தொடர்பாக எந்த காவல் நிலையத்திலும் தான் புகார் அளிக்கவில்லை என துணை தாசில்தார் கோபால் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 22ம் தேதி அன்று தூத்துக்குடி சார் ஆட்சியர் உத்தரவின் பேரில், நிர்வாக நடுவராக, தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் தான் பணியில் இருந்ததாகவும், அப்பகுதியில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் அளிக்காத புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான செய்திகளை பார்த்து, தானும் தன் குடும்பத்தாரும் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாகவும், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தில் கோபால் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், அதனை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.

பொய்யான புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருவாய்த்துறை அலுவலர்களை பொய்யான புகார் அளிக்க அரசு அதிகாரிகள் நிர்பந்திப்பதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...