கமல் - குமாரசாமி சந்திப்பை கை விட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் ...

ஜூன் 04, 2018 827

சென்னை (04 ஜூன் 2018): கமல்- குமாரசாமி சந்திப்பு காவிரி பிரச்சினையை திசை திருப்பும் சந்திப்பை கைவிட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து மத்திய அரசு காலம் கடந்து அரசிதழில் வெளியிட்டுள்ளதோடு மட்டுமில்லாமல், நிரந்தர தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் ஆணையம் உரிய காலத்தில் அமைப்பதில் மத்திய நீர்வள ஆணையம் மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்க மாட்டேன் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டவர் குமாரசாமி .

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு குமாரசாமி அமைதி காத்து வரும் நிலையில் கமல் சந்திப்பு குமாரசாமி எதிர் கருத்தை வெளியிட்டு காவிரி பிரச்சினையை திசை திருப்பி தமிழக நலனுக்கு எதிரான கருத்துப் போராட்டத்திற்கு வாய்ப்பளித்து விடும்.

சட்டப் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தங்களின் சந்திப்பால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. குமாரசாமி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற மறுப்பாரேயானால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையால் ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் என்பதை அவர் உணர்ந்து தான் மவுனம் காத்து வருகிறார்.

தாங்கள் காவிரி தீர்வுக்கு விரும்புவீர்களேயானால் குடியரசு தலைவரை உடன் சந்தித்து UP சிங் மீது புகார் மனு அளிப்பதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நீர் வள ஆணையம் ஏற்று உரிய காலத்தில் செயல்படுத்துவதை குடியரசு தலைவர் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தலாம்.

எனவே ஆக்கப்பூர்வமான சட்ட வழிமுறையை பின்பற்றி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலையில் கமல் -குமாரசாமி சந்திப்பு தமிழக நலனுக்கு பாதகமாக அமையும் என்பதை எச்சரிக்கையுடன் உணர்த்துகிறேன். எனவே தமிழக நலன் கருதி சந்திப்பை கைவிட வலியுறுத்துகிறேன்.

மேற்கண்டவாறு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...