கட்டுகட்டாக கள்ளநோட்டுகள் - முக்கிய குற்றவாளிகள் கைது!

ஜூன் 04, 2018 509

கோவை (04 ஜூன் 2018): கோவையில் கட்டுகட்டாக கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் நேற்று முன்தினம், மாநகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம், 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு இருந்தன. இவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், வேலாண்டிபாளையத்தில் உள்ள இவரது அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, 1.18 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்பு இவரை கைது செய்து விசாரித்ததில், நண்பர்களுடன் சேர்த்து கள்ள நோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இவரது அலுவலகத்தில், கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மெஷின், கட்டிங் மெஷின், பிரின்டர், மொபைல்போன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்றரை மாதங்களாக ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர் என்பது மாநகர போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.

தலைமறைவான சுந்தர் என்பவன் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும், இவர்களுடன் யூசுப் மற்றும் கிதர் முகமதும் இணைந்து கள்ள நோட்டுகள் தயாரித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் நல்ல ரூபாய் நோட்டுகளுக்கு இடையே கள்ள நோட்டுகளை வைத்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுந்தரின் செல்போன் சிக்னல் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் காட்டுவதால் தனிப்படையினர் கேரளாவிற்கு விரைந்து சென்று முகாமிட்டு தேடி வந்தனர். அப்போது தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் கிதர் முகமது இருப்பதை தெரிந்து, அங்கு சென்ற போலீசார் கிதரை கைது செய்தனர். தற்போது கிதரை கோவைக்கு அழைத்து வரும் தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...