மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!

ஜூன் 11, 2018 775

தூத்துக்குடி (11 ஜூன் 2018): தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த மே-22ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட பேரணியாகச் சென்றனர். இதில் போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு முற்றி கலவரமாக மாறியது. இதில், கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு ஆகியவை நடந்தது. கலவரத்தை ஒடுக்க நடந்த தடிதடி, துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் பலத்த மற்றும் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த மூன்று நாட்கள் வரை மாவட்டத்தில் பல பகுதிகளில் கல் வீச்சு, பேருந்து எரிப்பு ஆகியவையும் நடந்தது. இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் தெருக்களில், வீடுகளில் புகுந்து ஆண்களை போலீஸார் பகிரங்கமாக அடித்து சித்ரவதை செய்த கொடுமையும் நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர் .

இதில் பலரை விடுவித்தும் சிலரை விடுவிக்காமலும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுனில் ரகுமான், முகமது இஸ்மாயில், முகமது யூனுப், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டையன், கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன், வேல்முருகன் ஆகியோர் மீது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உத்தரவின் பேரில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் தூத்துக்குடி முற்றுகைப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் 6 பேரும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...