தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி!

ஜூன் 13, 2018 590

சென்னை (13 ஜூன் 2018): தமிழகத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை வழங்காமல், வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உடல் நலக்கோளாறு, விபத்து போன்றவற்றால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக தருவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இது மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட நபர்களின் உறவினர்கள் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக அறுவைச் சிகிச்சை என்ற பெயரில் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுவும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்த உறுப்புகளை விற்பனை செய்து பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் இந்த முறைகேடுகள், மோசடிகள், மனித உரிமை மீறல்கள் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் துணையுடன்தான் நடைபெற்று வருகிறது. இந்த உறுப்பு மோசடி தொடர்பாக சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையில் புதுடெல்லியில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உறுப்புகளை ஒதுக்கீடு செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளும் வகுக்கப்பட்டது.இந்தியாவில் ஏராளமான நோயாளிகள் உறுப்பு மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டினருக்கு உறுப்புகளை விற்பனை செய்வது உறுப்பு தானத்திற்கு ஏற்பட்ட சவாலாக உள்ளது என்று தேசிய உறுப்பு மாற்று கழகத்தின் இயக்குநர் தமிழகத்தில் பலகோடி மோசடி விமல் பண்டாரி தெரிவித்துள்ளார். பொதுவாக உறுப்புகளைத் தானம் செய்பவர்களின் உறுப்புகளை முதலில் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும். அதன்பின்னர் நமது நாட்டில் உள்ளவர்களுக்கு வரிசைப்படி தர வேண்டும். அப்படி உறுப்புகளைப் பெற நோயாளிகள் இல்லை என்றால் மட்டுமே, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தர வேண்டும். அதுவும் இல்லாத பட்சத்தில்தான் வெளிநாட்டினருக்கு உறுப்புகளை தர வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் மீறப்பட்டு வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளித்து உறுப்புகள் பொருத்தப்படுவது விதிமீறல் என்று விமல் பண்டாரி தெரிவித்துள்ளார்.

ஆனால், அதிக எண்ணிக்கையில் இந்திய நோயாளிகள் உறுப்பு மாற்றத்திற்காக காத்திருக்கும் நிலையில் வெளிநாட்டினருக்கு சட்ட விரோதமாக விதிகளை மீறி உறுப்புகள் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என்று மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. உறுப்புகளை விற்பனை செய்யும் மோசடி நபர்கள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளனர் என்று தேசிய உறுப்பு மாற்று கழகத்தின் இயக்குநர் விமல் பண்டாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உடல் உறுப்புக்களை யாருக்கு வழங்கலாம் என்பதை வரிசைப்படுத்த ஒரு கமிட்டி உள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக முதல்வரும், செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சரும் உள்ளனர். அந்த அமைப்பில் தனியாரை சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உடல் உறுப்புகள் தானம் பற்றிய தகவல்கள் வந்தவுடன், அந்த ஊழியர்கள் தனியார் மருத்துவமனைக்கு முதலில் தகவலை தெரிவித்து விடுகின்றனர். இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தனியார் மருத்துவமனை கூட்டுச் சேர்ந்து அந்த உடல் உறுப்புகளை வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பொறுத்த சில விதிமுறைகளை தவறாக பயன்படுத்தி, விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதற்காக பல லட்சம் ரூபாய் பணம் கைமாற்றப்படுகிறது.

எவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தாலும் தமிழகத்தில் இந்த முறைகேடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று விமல் பண்டாரி தெரிவித்துள்ளார்.இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலராக பதவி வகித்த டாக்டர் பி.பாலாஜி தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கூறும்போது, இந்தியர்களுக்குத்தான் முதலில் உறுப்பு மாற்றம் செய்யப்படுகிறது. இந்திய நோயாளிகளுக்கு அந்த உறுப்புகள் பொருந்தாத நிலையில் வெளிநாட்டினருக்கு பொருத்தப்படுகிறது என்றார்.இந்நிலையில், தமிழ்நாடு உறுப்பு மாற்றம் ஆணையத்தின் உறுப்பினர் செயலராக டாக்டர் காந்திமதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறைகேடுகள் தொடர்பாக அவர் கூறும்போது, உறுப்பு மாற்றத்தில் வெளிப்படையான நிலையைக் கொண்டுவருவதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உறுப்பு மாற்ற பதிவு கோரும் அமைப்புடன் நேரடியாக தொடர்புகொண்டு பேசியுள்ளேன். அனைத்து மருத்துவமனைகளுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வுகளை நடத்துவது கடினம். தமிழகம் முழுவதும் எங்கள் ஆணையத்திற்கு 7 ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே உள்ளதால் இது கடினமாக விஷயம்தான். இருந்தாலும் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் என்றார்.

கேரள முதல்வர் கடிதம் கேரள முதல்வர் பினராய் விஜயன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ சமீபத்தில் சேலத்தில் நடந்த ஒரு விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவரான மணிகண்டன் என்பவரின் உடல் உறுப்புகள் அவரின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது. அந்த நபரின் உடல் உறுப்புகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த உறுப்புகள் இந்திய நோயாளிகளுக்கு மாற்றம் செய்யப்படாமல் அவரின் நுரையீரல் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவருக்கும், மற்ற உறுப்புகள் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

யாருக்கு உறுப்பு மாற்றம்? தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 144 பேருக்கு கல்லீரல் மாற்றமும், 286 பேருக்கு கிட்னி மாற்றமும், 91 பேருக்கு இதய மாற்றமும், 75 பேaருக்கு நுரையீரல் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இதே ஆண்டில் வெளிநாட்டினர் 31 பேருக்கு இதய மாற்றமும், 32 பேருக்கு நுரையீரல் மாற்றமும், 32 பேருக்கு இதயம் மற்றும் நுரையீரல் மாற்றமும் நடந்துள்ளது. 2018 ஜூன் 9ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் உறுப்பு மாற்றத்திற்காக 5,310 பேர் காத்திருக்கிறார்கள். 53 வௌிநாட்டினரும் காத்திருக்கிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...