திமுக போராட்டம் அறிவிப்பு!

ஜூன் 22, 2018 485

சென்னை (22 ஜூன் 2018): சேலம் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வரும் 23 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்களை கைது செய்தால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தும் முதல்-அமைச்சர் தன் சொந்த மாவட்ட மக்கள் மீது ஏவிவிட்டுள்ள காவல்துறை அடக்குமுறையை நிறுத்தவில்லை. குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை பிரயோகித்து ஜனநாயக பூர்வமான அறவழி போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது இந்த அ.தி.மு.க அரசு.

எனவே, சேலம் பசுமை சாலை திட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தவும், அதுவரை விளைநிலங்கள் வழியாக நடத்தப்படும் சர்வேயை நிறுத்தி வைக்கவும், போராடும் மக்கள் மீதான அ.தி.மு.க அரசின் காவல்துறை அடக்கு முறைக்கு கண்டனம் தெரிவித்தும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க சார்பில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி 23-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில், ராஜேந்திரன், எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ஆ.ராஜா ஆகியோர் முன்னிலையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...