பியூஷ் மனுஷுக்கு ஜாமீன் - மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் மறுப்பு!

June 22, 2018

சேலம் (22 ஜூன் 2018): ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையம் சுமார் 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதேபோன்று சேலத்தில் இருந்து சென்னை வரையில் எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கபடுகிறது. இதனால், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கபடுவார்கள் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக சேலமே குரல்கொடு இயக்கத் தலைவர் பியூஷ் மனுஷ் போராட்டங்கள் நடத்தி வந்தார். மேலும், பல்வேறு தலைவர்களையும் அழைத்து வந்து கூட்டங்கள் நடத்தினார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 3-ம் தேதி சேலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான் சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கான நிலங்களைப் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி சேலமே குரல்கொடு இயக்க தலைவர் பியூஷ் மனுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், அன்று காலையே சென்னை சென்று நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்ததனர்.

தொடர்ந்து 18-ம் தேதி இரவு பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் ஜாமீன் கேட்டு ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் விசாரணைக்கு வந்தன.

இவற்றை விசாரித்த ஓமலூர் குற்றவியல் நடுவர் ரமேஷ், சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இவர் பத்தாயிரம் காப்புத் தொகை, தினமும் காலையும் மாலையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிடுவது ஆகிய நிபந்தனைகளை விதித்து நடுவர் ரமேஷ் ஜாமீன் வழங்கினார். ஆனால் நடிகர் மன்சூல் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

 

Search!