ஸ்டாலின் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்தார் - அமைச்சர் பகீர் குற்றச் சாட்டு

ஜூன் 24, 2018 1716

ராமநாதபுரம் (24 ஜுன் 2018): தகுதி நீக்கம் செய்யப் பட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு டிடிவி தினகரன் மூலம் ஸ்டாலின் கோடிக் கணக்கணக்கில் பணம் கொடுத்ததாக அமைச்சர் மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசியதாவது:-

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி மிரட்டலுக்கு பயந்து முதல்வராக இருந்த கருணாநிதி புதுப்பிக்க தவறிவிட்டார். அப்போது முதல் கர்நாடகா அரசு தண்ணீரை தர மறுத்து விட்டது.

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழி காட்டுதலின்படி முதல்- அமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட கடுமையான போராட்டத்தின் விளைவாக இந்த வழக்கை நேர் திசையில் எடுத்துச் சென்று சட்டப் போராட்டங்களை நடத்தி 177 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத வகையில் காவிரி நீருக்காக பாராளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கினோம். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்தோம்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம். அதன் மூலம் இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் இந்த ஆட்சியை கலைக்கலாம் என்ற நோக்கத்தில் சதிகார வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

செயலற்ற தலைவராக விளங்கி வரும் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் அந்த மக்களை எல்லாம் தூண்டி விட்டு அதில் பல்வேறு விதமான சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை போர்க்களமாக மாற்றி விட்டனர்.

18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் மூலமாக கடத்தி சென்று அவர்களுக்கு தலா ரூ.10 கோடி வீதம் 180 கோடி ரூபாயை டி.டி.வி.தினகரன் வழியாக மு.க.ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார்.

ஆசை காட்டி மோசம் செய்து இன்றைக்கு அந்த எம்.எல்.ஏ.க்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர். இதற்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம். இதற்கு கருவியாக விளங்கியவர் டி.டி. வி.தினகரன். 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வெகு விரைவில் தீர்ப்பு வரும். இடைத்தேர்தல் வரும்.

இதுவரை நடந்த 110 அரசு விழாக்களில் ஒரே ஒரு விழாவில் மட்டும் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டுள்ளார். திருவாடானை தொகுதியில் மக்கள் குறைகளை நாங்கள் போக்கி வருகிறோம். அந்த தொகுதி மக்கள் புலம்புகின்றனர். தொகுதிக்குள் செல்வதற்கு பயமாக இருந்தால் நான் கூட்டிச் செல்கிறேன் தகுதி இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்.

மு.க.ஸ்டாலின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அதிருப்தியில் உள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்து அறிவுரை வழங்குவதாகவும், அதன்படி செயல்படுவதாகவும் தெரிகிறது.

மு.க.ஸ்டாலினுக்கும். துரைமுருகனுக்கும் அதிகாரப்போட்டி நடக்கிறது. தடை செய்யப்பட்ட குட்காவை சட்ட சபைக்கு கொண்டு வந்த எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் நிலை பரிதாபமாக உள்ளது. காலம், நேரம் கருதி சரியான நேரத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார். தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை இருக்கும்.

அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு தடைபோடும் வகையில் தி.மு.க. விவசாயிகளை தூண்டி விடுகிறது. மிகப் பெரிய சாலைகளை போட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறோம். அப்போது தான் தொழில் வளர்ச்சிகள் பெருகும். மத்திய அரசு தரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...