தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறதா? - கி.வீரமணி கேள்வி

ஜூன் 25, 2018 483

சென்னை (25 ஜூன் 2018): தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறதா? என்று தி.க.தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருந்து வருகையில், ஏதோ நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவது போல மாவட்டம்தோறும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆட்சி உண்மையிலேயே நடைபெற்ற கால கட்டங்களில் கூட எந்த ஓர் ஆளுநரும் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்ததில்லை.

இதற்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக ஆய்வு செய்ய ஆளுநர் மாவட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க. கறுப்புக் கொடி காட்டும் ஜனநாயகக் கடமையைச் செய்து வருகிறது. மாநில ஆளுநர் மாவட்டம் தோறும், சென்று ஆய்வு நடத்துவதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு முதுகெலும்பு அற்ற முறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

‘‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?’’ என்று கேட்டவர் அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மாநில உரிமையைக் கொச்சைப்படுத்தும் ஓர் ஆளுநருக்கு ஆலவட்டம் சுழற்றுவது வெட்கக்கேடு. வார்த்தைக்கு வார்த்தை அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று லாலி பாடும் முதல்-அமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்த அம்மா ஆளுநர் பிரச்சினையில் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்ற தகவல் தெரியுமா?

1993 ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி நேரடியாக சென்று கள ஆய்வு செய்தார். ஆளுநர் அங்கு சென்றதற்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இதன்பிறகு 1995-ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற ஆளுநர் சென்னா ரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா புறக்கணித்தார். அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்குப் போகக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்தார்.

ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க.வினர் மீதான வழக்கை ரத்து செய்து, ரிமாண்ட் செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். குட்டக் குட்ட குனிந்து கொடுத்தால் இதற்கு மேலும் ஆளுநர் செய்வார்-செல்வார் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...