264 புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம் - தமிழக அரசு அறிவிப்பு!

ஜூன் 26, 2018 818

சென்னை (26 ஜூன் 2018): தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 264 பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான அரசாணையை நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, பல்வேறு திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன

01.06.2018 அன்று தமிழ்நாடு சட்டசபை விதி 110இன் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இதற்காக 693 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இப்பாடப்பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62.75 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2018-19ஆம் கல்வியாண்டிலிருந்து 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில் மற்றும் 71 பிஎச்.டி என மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்குவதற்கும், இப்பாடப்பிரிவுகளுக்காக 693 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் முதலாமாண்டிற்கு 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒப்புதலும், நிதியும் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேற்காணும் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 27.6.2018 முதல் அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். அவ்விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 9.7.2018ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...