பெரம்பலூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை!

ஜூன் 27, 2018 1018

பெரம்பலூர் (27 ஜூன் 2018): பெரம்பலூரில் பிரபல ரவுடி தேஜா என்கிற பாஸ்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் தேஜா(எ) பாஸ்கர். 35 வயதான இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றில் வேலை செய்து வந்தார். இது மட்டுமின்றி இவர் மீது பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் உள்ள வீட்டில் இருந்த தேஜாவை சிலர் காரில் வந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கருப்பையா உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று மதியம் பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஏரியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதாக பெரம்பலூர் நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சொந்த ஊரில் இருந்து அழைத்து வரப்பட்ட தேஜாவை வேறு ஒரு இடத்தில் வைத்த கொலை செய்து எளம்பலூர் ஏரியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட தேஜா அவரது சொந்த ஊரான விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட பிறகு காணவில்லை என்ற புகார் கொடுக்கப்பட்டுள்ளதால், சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...