திருவண்ணாமலை நிர்வாண பூஜைக்கு நீதிமன்றம் தடை!

ஜூலை 01, 2018 690

திருவண்ணாமலை (01 ஜூலை 2018): திருவண்ணாமலையில் நிர்வாண பூஜை நடத்தி வரும் சாமியாருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் உள்ளுர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். அதுவும் கிரிவலம் நாட்களில் கேட்கவே வேண்டாம். லட்சக்கணக்கானோர் குவிந்துவிடுவர். அதிலும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு மிகுந்தது. அன்றைய இரவில், பல சந்நியாசிகளும், முனிவர்களும், சித்தர்கள் என சொல்லப்படுவர்களும் யாகம் வளர்ப்பர். கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலை என்கிற பகுதியில்தான் இந்த யாகங்கள் நடைபெறும்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு சாமியார் நிர்வாணமாக அமர்ந்து யாகம் வளர்த்துக்கொண்டு இருந்தார்.

10 பேர் கொண்ட ஒரு குழு சத்தமாக மந்திரங்கள் உச்சரித்துக்கொண்டு இருந்தது. இந்த மந்திர சத்தமும், யாக புகையும் கிரிவலம் வந்தவர்களை அந்தப்பக்கம் இழுத்தது, பணக்கார தன்மையுடைய சிலர் அந்த யாகத்தின் முன் அமர்ந்து வணங்கிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்து கிரிவலம் வந்தவர்களும் நின்று வணங்கினர். வணங்கியவர்கள், யாகத்தின் முன் அமர்ந்திருந்தவரை உற்றுநோக்கிய பின்பே தெரிந்தது அந்த சாமியார் நிர்வாணமாக இருந்தது. அது பக்தர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. பெரும்பாலான பெண் பக்தர்கள் அந்த பகுதியை வேகமாக கடந்து சென்றனர்.

அவர் யார் என்று விசாரித்தபோது, அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் அட்ட யோகிஸ்வரா மவுனி திகம்பரி ஷட்டகோபி. கடந்த 25ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார். உலக நன்மைக்காக 61 நாட்கள் நிர்வாண நிலையில் இவர் யாகம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கும் புகார்கள் வந்து குவிந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி, நிர்வாண பூஜை நடத்தி கொண்டிருந்த ஆந்திர சாமியார் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர்களை அங்கிருந்து காலி செய்யும்படி கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...