உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாதாம்!

ஜூலை 05, 2018 557

புதுச்சேரி (05 ஜூலை 2018): ஆளுநர் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அம்மாநில ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அதிகாரம் தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் கடந்த 2017 டிசம்பர் மாதம் இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்றிருந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷண் ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், “யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அங்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநர் என்பவர், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் எந்திரமாக இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் எதுவும் கிடையாது. அமைச்சரவையில் சிபாரிசுப்படிதான் செயல்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றுள்ளார். அதேபோல இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று அம்மாநில ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...