திருடனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்!

ஜூலை 05, 2018 774

சென்னை (05 ஜூலை 2018): சென்னையில் திருடனைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அளித்து அசத்தியுள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை அண்ணாநகரில் பெண் டாக்டர் ஒருவரிடம் நோயாளிபோல வந்த திருடன் அவரின் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பினான். இதனை பார்த்த எதிரில் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்த சிறுவன் சூர்யா திருடனை தனியொருவனாக விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவலையறிந்த கமிஷனர் ஏ.கே.விஸ்வாநாதன், சூர்யாவை நேரில் அழைத்து பாராட்டினர். அப்போது அவருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட டாக்டரும் சிறுவன் சூர்யாவை பாராட்டியதோடு வெகுமதியும் கொடுத்தார்.

இந்தநிலையில் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக் பணியை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். சம்பவம் நடந்தபோது சூர்யாவுக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் தற்போது 18 வயது பூர்த்தி அடைந்ததால் அவருக்கு ஏ.சி மெக்கானிக் வேலை வாங்கி கொடுக்கப் பட்டதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவள மேம்பாட்டுத்துறை) சீனிவாசன் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வழங்கினார். தொடர்ந்து, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும், தனியார் கல்விக்குழுமம் சார்பில் ஒரு லட்சத்துக்கான காசோலையும் கொடுக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...