நான் நினைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? - டிடிவி தினகரன்!

ஜூலை 09, 2018 733

சென்னை (09 ஜூலை 2018): நான் நினைத்திருந்தால் 2001 லேயே முதல்வராக ஆகியிருப்பேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன் பேசியதாவது: எம்ஜிஆர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகியால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவினால்தான் இந்த ஆட்சி காப்பாற்றப்பட்டது. அவரால் மட்டுஏம் இந்த ஆட்சி தொடர்ந்து வருகிறது.

ஜெயலலிதா கூட எடப்பாடி பழனிசாமியை அமைச்சராகத்தான் ஆக்கினார். சசிகலா அவருக்கு முதல்வர் பொறுப்பை வழங்கினார். ஆனால் தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கினார். ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று முதல்வர் பழனிசாமி கூறுகிறார். ஆனால், இந்த ஒரு தினகரனையே ஆர்.கே.நகரில் எதிர்கொள்ள முடியவில்லை

இரட்டை இலை சின்னம், ஆட்சி அதிகாரம் இருந்தும் ரூ.150 கோடி செலவு செய்தும் என்னை வெற்றி பெற முடியவில்லை. நான் புறவழியில் வந்தவன் அல்ல. ஜெயலலிதாவினால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவன். ஜெயலலிதாவிற்கு குடும்பம் இல்லை என்ற காரணத்தினால், சசிகலா குடும்பத்தை சேர்ந்த என்னை அரசியலுக்கு வரவழைத்தார்.

என்னை கட்சியில் இருந்து வெளியேற சொன்னவர்கள், அரசியலில் இருந்து வெளியாறுவார்கள். நான் நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டிலேயே முதலமைச்சராக ஆகியிருக்கலாம். நான் புறவழியில் வர விரும்புபவன் அல்ல. 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வேன். இல்லையேல் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன். ஆனால் பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன். பணம் கொடுத்தோ, பிரியாணியோ, முட்டை கொடுத்தோ, மது கொடுத்தோ கூட்டத்தை சேர்க்கவில்லை. இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...