லோக் அயுக்தா சட்ட மசோதாவுக்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு!

ஜூலை 09, 2018 506

சென்னை (09 ஜூலை 2018): லோக் அயுக்தா சட்ட மசோதாவுக்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், குடிமைப் பணி உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்தால், அதனை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட, லோக் ஆயுக்தா அமைப்பை ஜூலை 10ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கைக்கான கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று லோக்ஆயுக்தா மசோதாவை மாநில பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.

அதன்படி, இந்த லோக் ஆயுக்தாவின் தலைவர் நீதித் துறை, நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில் 25 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருப்பார் என்றும் இந்த அமைப்பின் நான்கு உறுப்பினர்களில் இருவர் சட்டத் துறை சார்ந்தவராக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆளுனர் லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்வார். இந்த உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது நிறைவடையும்வரை பணியில் இருப்பார்கள்.
லோக் ஆயுக்தா, தான் பெறும் புகார்களின் அடிப்படையில் யாரையும் அழைப்பாணை அனுப்பி விசாரிக்கும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். சாட்சியங்களை அழைத்து விசாரிப்பதோடு, நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களையும் கேட்டுப்பெறும்.

லோக் ஆயுக்தாவில் தவறாகப் புகார் செய்கிறவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையோ, ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமோ விதிக்க முடியும். யார் மீது பொய்ப் புகார் செய்யப்படுகிறதோ, அவருக்கு இழப்பீடு அளிக்கவும் வேண்டும். தவிர, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குற்றம்செய்யப்பட்டிருந்தால் அதனை லோக் ஆயுக்தா விசாரிக்க முடியாது. இந்த லோக் ஆயுக்தா அமைப்பானது உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். ஆகவே, உரிமையியல் நீதிமன்றங்கள் இதில் தலையிட முடியாது. தமிழக லோக் ஆயுக்தாவின் மசோதா வரம்பிற்குள் முதலமைச்சர் வருவாரா என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் இந்ததச் சட்டம் போதுமான அதிகாரங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறி தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்புச் செய்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...