சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் தஷ்வாந்த் தூக்கு உறுதி!

July 10, 2018

சென்னை (10 ஜூலை 2018): சிறுமி ஹாசினி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப் பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி, 2017ல் பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், தஷ்வந்த் தூக்குதண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தீர்ப்பில், “செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது. தஷ்வந்த் மீதான அனைத்து வழக்குகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தஷ்வந்த் சார்பில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!