ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

July 11, 2018

சென்னை (11 ஜூலை 2018): கல்விக் கடன் மறுக்கப் பட்டது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தனக்கு கல்விக்கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடக்கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது தந்தைக்கு வங்கிக் கடன் இருப்பதால் கல்விக் கடன் வழங்க இயலாது என ஸ்டேட் வங்கி மறுத்துவிட்டது. இதனை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவி தீபிகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது தந்தைக்கு எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லாத நிலையில் வங்கி நிர்வாகத்தின் தவறான பதிலை ஏற்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கல்வி கடன் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மேலும், தவறான தகவல் அளித்து தன்னுடைய தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்தற்காக நஷ்ட ஈடாக 10 லட்சம் வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், தண்டபாணி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபிகாவின் தந்தை வங்கிக் கடன் பெற்றதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பான ஆவணங்களை ஜூலை 16 ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!