நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் தவறுகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை!

ஜூலை 12, 2018 634

சென்னை (12 ஜூலை 2018): நீட் தமிழ் வினாத்தாள் மொழியாக்கத் தவறுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்க வேண்டும். என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம். கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து அதன் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் மற்றும் மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் சீ.தினேஷ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக இந்த ஆண்டு நடத்தப்பட்ட ,நீட் நுழைவுத் தேர்வின் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் மொழியாக்கத்தில் தவறுகள் இருந்தன. இதனால் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வு எழுதிய 24 000 மாணவர்கள் பாதிக்கப் பட்டனர். இம் மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசையும்,மத்திய இடைநிலை கல்வி வாரியத்தையும் , தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதாவது ,நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை வழங்கி ,புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட வலியுறுத்த வேண்டும்.

தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் ,நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும். இத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ , உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யக் கூடாது என தமிழக அரசு மத்திய அரசின் மூலம் வலியுறுத்த வேண்டும்.

ஆனால்,இவை எதையும் செய்யாமல் ,ஒரு வேண்டுகோளைக் கூட விடுக்காமல், " சி.பி.எஸ்.இ எடுக்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படும் " என தமிழக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருவது,தமிழ்வழியில் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களின் நலன்களை ,சி.பி.எஸ்.இ யிடம் ஒப்படைக்கும் செயலாகும்.தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும்.தமிழ் வழியில் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

சென்ற வருடம்,தமிழ் மொழி வினாத்தாளில் ,வினாக்களே மாறி இருந்தன.அதனாலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப் பட்டார்கள்.அப்போதும் கூட ,தமிழக அரசு தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்களின் நலன்களைக் காக்க ,மத்திய அரசு மூலமாகவோ, நீதிமன்றம் மூலமாகவோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியை பெற்றுத்தர வில்லை.இதே போன்று ,இந்த ஆண்டும் தமிழக அரசு தமிழ்வழி மாணவர்களுக்கு துரோகம் இழைப்பது கண்டனத்திற்குரியது.

சி.பி.எஸ்.இ எடுக்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படும் என தமிழக அரசு கூறுகிறது.

ஆனால்,சி.பி.எஸ்.இ அமைப்போ உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ யின் இந்நிலையை தமிழக அரசு ஏற்கிறதா?ஆதரிக்கிறதா? சி.பி்.எஸ்.இ யை மேல்முறையீடு செய்ய விட்டு விட்டு ,தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?

தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களின் நலன்களை காக்க எதையும் செய்யாமல் அமைதி காக்கப் போகிறதா? தமிழக அரசின் ,இத்தகையப் போக்கு தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் சி.பி.எஸ்.இ யை நம்பிக்கொண்டு, "தாங்களும் தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்களின் பக்கமே இருப்பதாக", தமிழக அமைச்சர்கள் கூறிக் கொள்வது மாபெரும் கேலிக்கூத்தாகும்.

எனவே, இத்தகைய ,மாணவர் விரோதப் போக்கை கைவிட்டு,உடனடியாக தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அரசின் அமைச்சர்கள் ,உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து ,இத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்.

புதிய தரவரிசை பட்டியலை அடிப்படையாக கணக்கில் கொண்டால்,தமிழ் வழியில் தேர்வு எழுதிய எத்தனை மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைத்திருக்குமோ, அத்தனை இடங்களை கூடுதலாக மத்திய மாநில - அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அவசியப் படின் , தனியார் கல்லூரிகளில்,தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழங்களில் காலியாக உள்ள இடங்களில் இம்மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்க வேண்டும்.அம்மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும்,படிப்பு முடியும் காலம் வரை சி.பி.எஸ்.இ செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையின் ,தீர்ப்பை மதி்க்காமல், இந்திய மருத்துவக் கவுன்சில் செயல்படுவது வருத்தமளிக்கிறது. இத் தீர்ப்பை நடைமுறைப் படுத்தினால்,பல மாணவர்கள் ஆயுர்வேதா,யுனானி, ஓமியோபதி,சித்தா போன்ற படிப்புகளில் சேரமுடியும்.தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும் சேரமுடியும்.வெளிநாடுகளுக்குச் சென்றும் மருத்துவம் பயிலமுடியும். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பிரச்சனையை பரிவோடு அணுகாமல் ,பழிவாங்கும் போக்கோடு ,மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...