அடப்பாவி இவன் இவ்வளவு மோசக்காரனா?

July 15, 2018

கோவை (15 ஜூலை 2018): கோவை கல்லூரி மாணவி பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது பலியான சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது பாதுகாப்பு கருவிகள் ஏதுமின்றி பயிற்சியாளர் மாடியில் இருந்து தள்ளியதில் மாணவி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூர் ஆய்வாளர் மனோகரன், ஆலாந்துறை ஆய்வாளர் தங்கம் ஆகிய இருவர் அடங்கிய தனிப்படையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இந்த சம்வத்தின் புலனாய்வு குறித்து கேட்டபோது, பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.

கோவையில் மாணவி லோகேஸ்வரியின் மரணத்திற்கு காரணமான ஆறுமுகம் என்பவர் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தை சேர்ந்தவர் அல்ல என்பதும், கல்லூரிக்கு அவர் அனுப்பிய கடிதங்கள் அனைத்தும் போலியானவை என்பதும் வெள்ளிக்கிழமை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இது போன்ற முறைகேடான ஒத்திகைகளை இவர் தனியாக செய்கிறாரா அல்லது இவர் உட்பட ஒரு குழுவாக பல்வேறு கல்லூரிகளில் இது போன்ற ஒத்திகைகள் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகம் தொடர்பான படிப்பு, பணி, முந்தைய பயிற்சிகள்,அவரின் பின்னணி தொடர்பான ஆவணங்கள் ஆகியவை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதில் ஆறுமுகத்துடன் இருந்ததாக கூறப்படும் சதீஷ், கோபாலகிருஷ்ணன், வினிதா ஆகியோரிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் சனிக்கிழமை அசோக் மற்றும் தாமோதர் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த 5 பேரும் ஆறுமுகத்துடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற வகையிலும் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசோக் மட்டும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்துள்ளார். இதனால், தன் வாழ்வாதரத்திற்காக இவர் திருநெல்வேலியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். போலியோ பாதிப்பால் இடது கால் சற்று ஊனமாக இருப்பதால் அதிக நேரம் நிற்க முடியாது என்பதற்காக அந்த கடையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். பிறகு மற்றொரு நபரின் உதவியுடன், கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் வார்டனாக சேர்ந்துள்ளார். அதற்கு பிறகான ஆறுமுகத்தின் வாழ்க்கைதான் மர்மமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை தொலைதூர கல்வியில் படித்ததாக காவல்துறை விசாரணையில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் தேசிய பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பி பாதுகாப்பு ஒத்திகையையும் நடத்தி வந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் 1,047 கல்லூரிகளுக்கு இது போன்று நடத்தியுள்ளதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவருக்கு உடந்தையாக...போலியான லெட்டர் ஹெட் தயாரிக்க ஆறுமுகத்திற்கு உதவியதாக, ஈரோட்டை சேர்ந்த அசோக் மற்றும் தாமோதரன் ஆகியோரை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதையை நிலையில், ஆறுமுகத்திற்கு உதவியாக படித்து வேலையில்லாமல் இருக்கும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என 3 பேர் உள்ளனர். அரசு தேர்வுகள் எழுதும்போது , இது போன்ற பயிற்சியில் உதவியதாக குறிப்பிட்டால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் போன்ற போலி ஆசை வார்த்தைகள் கூறி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

மிக முக்கியமாக, 2011ம் ஆண்டுக்கு முன் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடத்திய வேறு ஒரு குழுவில் ஆறுமுகம் வேலை செய்து வந்துள்ளதாகவும், அந்த குழுவை சேர்ந்த நபர்கள் யார்? அவர்கள் உண்மையிலேயே தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்தவர்கள் தானா போன்ற விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!