மூட்டையில் வைத்திருந்த வெடி வெடித்து வாலிபர் பலி!

ஜூலை 18, 2018 574

மயிலாடுதுறை (18 ஜூலை 2018): மயிலாடுதுறை அருகே கோவில் விழாவுக்காக வெடிகள் கொண்டு சென்றவர் அந்த வெடிகள் வெடித்து சிதறி பரிதாபமாக உயிரழந்தார்.

தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையத்தை சேர்ந்த ராஜூ மகன் ராஜமாணிக்கம்(23), இவர் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ராஜமாணிக்கம், சதீஷ் ஆகியோர் வெடிகளை ஒரு சாக்கு பையில் எடுத்துக்கொண்டு பைக்கில் சென்றனர். பைக்கை சதீஷ் ஓட்டினார். ராஜமாணிக்கம் வெடிகள் நிரப்பப்பட்ட சாக்கு பையை கையில் பிடித்துக்கொண்டு பின்னால் அமர்ந்து சென்றார்.

ஆத்தூர் முக்கூட்டு என்ற இடம் தாண்டி சென்று கொண்டிருந்தபோது வெடிகள் வைத்திருந்த சாக்குப்பை, பைக்கின் சைலன்சரில் பட்டு உரசிக்கொண்டே வந்தது. இதில் வெடிகள் வெப்பமாகி இருந்தன. கருவேலி என்ற இடத்தில் பாலத்தில் ஏறி இறங்கிய போது, பைக் திடீரென பள்ளத்தில் இறங்கியது. அப்போது ஏற்பட்ட அதிர்வில் வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் பைக் நிலைகுலைந்து ரோட்டில் விழுந்தது. வெடிப்பையை வைத்திருந்த ராஜமாணிக்கம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். சதீஷ் கை, காலில் லேசான சிராய்ப்பு காயத்துடன் தப்பினார். வெடிகள் ெவடித்து சிதறியதில் பைக்கின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. பின்பக்க டயர் முற்றிலும் எரிந்து, இரும்பு சக்கரம் மட்டும் இருந்தது.

இதுபற்றி அறிந்ததும் செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த சதீஷ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜமாணிக்கத்தின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...