திருமணம் ஆன ஐந்தே நாளில் மனைவி கணவனுக்கு கொடுத்த பரிசு!

ஜூலை 19, 2018 982

கோவை (19 ஜூலை 2018): திருமணம் ஆன ஐந்தே நாளில் கோவில் வாசலில் வைத்து அனைவரின் முன்பு மனைவி கணவரை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நேற்று மாலை ஒரு புதுமண தம்பதி சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்த போது புதுமாப்பிள்ளை கையில் ஒரு பெண்ணின் பெயர் பச்சை குத்தி இருப்பதை புதுப்பெண் பார்த்து விட்டார்.

உங்களது கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் யார்? என புதுப்பெண் கேட்டார். அவர் யார்? என்பது குறித்து இக்கோவிலில் சத்தியம் செய்யுங்கள் என்றார். ஆனால் புதுமாப்பிள்ளையால் சரியான பதில் கூற முடியவில்லை.

இதில் ஆத்திரம் அடைந்த புதுப்பெண் தனது கணவரை சரமாரியாக தாக்கினார். எத்தனை பெண்களை இவ்வாறு ஏமாற்றி இருப்பாய்? என கூறி தாக்கி கொண்டே இருந்தார். உனது அம்மாவை வரச் சொல். அவரிடம் தான் பேச வேண்டும் என தொடர்ந்து தாக்கினார். அப்போது புதுமாப்பிள்ளை தனக்கு நெஞ்சு வலிக்கிறது என கூறினார். அதற்கு புதுப்பெண் இப்படி நெஞ்சு வலிக்கிறது என சொல்லி ஏமாற்றியவர்களை பார்த்தவள்தான் நான் என கூறி தாக்கியபடி இருந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அங்கு குவிந்தனர். ஆனாலும் ஆவேசம் அடங்காத புதுப்பெண் தனது தாக்குதலை நிறுத்தவில்லை. இந்த தாக்குதலை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

இது குறித்து சாய்யாபா காலனி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் புதுமண ஜோடிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துகடவு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 5 நாட்களுக்கு முன் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது.

புதுப்பெண்ணிடம் உன் கணவர் மீது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசில் தான் புகார் தெரிவிக்க வேண்டும். பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் புதுமண ஜோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. கணவரை இளம்பெண் தாக்கிய வீடியோ தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...