உனக்கு அரசாங்க வேலை ஒரு கேடா? - தலித் பெண்ணை மிரட்டிய ஊர்காரர்கள்!

ஜூலை 20, 2018 549

சென்னை (20 ஜூலை 2018): சத்துணவு சமையல் செய்யும் தலித் பெண்ணுக்கு எதிராக தீண்டாமை தலைதூக்கியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த (ஜூலை) மாதம் 16ஆம் தேதி அவிநாசி வட்டாரம் ஒச்சாம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த பாப்பாள் என்பவர் திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று வந்துள்ளார்.

அன்றைய நாள் முதலே அந்த பள்ளியில் அவரை சமைக்க அனுமதி மறுத்துள்ளனர் அந்த ஊரை சேர்ந்த ஒரு குறிப்பிடட பிரிவை சேர்ந்த மக்கள்.

பள்ளி சத்துணவு சமையலர் பாப்பாள் தனது பணி தடுக்கப்பட்டது குறித்து கூறுகையில் "எனக்கு சொந்த ஊரே இந்த திருமலைக் கவுண்டம்பாளையம்தான். இந்த ஊரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒச்சாம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் 12 வருஷமா சத்துணவு ஊழியரா வேலை பார்த்துட்டு வரேன். சமீபத்தில் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வந்த ஒரு சத்துணவு ஊழியர் ஓய்வு பெற்றார். இதனால் எனக்கு என் சொந்த ஊரிலேயே டிரான்ஸ்பர் கெடச்சுது."

"நானும் சந்தோஷமா அந்த ஸ்கூலுக்கு வேலை பார்க்கப் போனேன். செவ்வாய்க்கிழமை அப்பாயின்மெண்ட் ஆர்டரை கொண்டுபோய் கொடுத்துட்டு சமையல்கூடத்துக்குள்ள நுழைஞ்சதுதான் தாமதம்.

ஊர்க்காரங்க சில பேர் கூடிவந்து, "சாதிப் பேரச் சொல்லி திட்டி, உனக்கு அரசாங்க வேலை ஒரு கேடான்னு கூசுர வார்த்தைகளால நோகடிச்சு என்னை அந்த சமையல்கூடத்துல இருந்தே வெளியே போக சொன்னாங்க. டீச்சருங்க கிட்டேப்போய் இவ இங்கே இருந்தா எங்க குழந்தைங்களை ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டோம்னு மிரட்டுனாங்க.

அதிகாரிங்களும் அவங்க சொல்றதை கேட்டுட்டு என்னோட டிரான்ஸ்பரை ரத்து பண்ணிட்டு, பழையபடி, ஒச்சாபாளையம் ஸ்கூலுக்கே இப்போ போக சொல்றாங்க. எனக்கு அரசு உத்தரவுப்படி என் ஊரிலேயே பணி பாதுகாப்பு வேண்டும்," என கோரிக்கை வைக்கின்றார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...