கருணாநிதி உடல் நிலை குறித்து ஸ்டாலின் விளக்கம்!

ஜூலை 25, 2018 995

சென்னை (25 ஜூலை 2018): தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிராக்கோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே கோபாலபுரம் திரும்பினார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒருவாரம் கடந்த நிலையில், நேற்று இரவு தி.மு.க தலைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் ``தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அச்சப்படும் வகையில் ஏதுமில்லை. கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர் நலமுடன் உள்ளார். ராணுவ விமானம் வழங்கியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் பதில் அளிக்க வேண்டும். தனிநபருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய தகவல் இப்போதுதான் வந்து உள்ளது. ஓ.பி.எஸ் மட்டும் அல்ல எடப்பாடி மீதும் கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...