ஓ.பி.எஸ், எடப்பாடி இடையே விரிசல் - ஒன்றிய அமைச்சர்களிடம் புகார்!

ஜூலை 26, 2018 563

புதுடெல்லி (26 ஜூலை 2018): எடப்பாடி அணியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் நேற்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து உட்கட்சி பூசல் குறித்து பேசினர்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சவுத் பிளாக்கில் இருக்கும் அவரது அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். ஆனால், அங்கு மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனுக்கு மட்டுமே பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பாக அமைச்சர் நிர்மலாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஓபிஎஸ் சந்தித்ததாக தகவல்கள் வேகமாக பரவியது. இதை மறுத்து, வேகவேகமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓபிஎஸ்சை சந்திக்கவில்லை என அமைச்சகத்தின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிர்மலா சீதாராமன் குறித்த கேள்விக்கு, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என தனது வேதனையை தெரிவித்தார்.

இந்நிலையில் இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சர்களான மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகிய இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கு நாடாளுமன்ற வளாகத்தில், துணை சபாநாயகர் தம்பிதுரை அறையில், ஒன்றிய நிதியமைச்சர் பியூஷ் கோயல் (பொறுப்பு). அவரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதியமைச்சரிடம் கொடுத்தனர். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் நடந்தது.

தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை கிரிஷிபவனில் இருக்கும் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாநில வளர்ச்சிக்கான கோரிக்கையை தமிழக அமைச்சர்கள் மனுவாக வழங்கினார்கள்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று முன்தினம் சந்திக்க அனுமதி மறுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது அலுவலகத்தில் அதிமுக எம்பி வேணுகோபாலை சந்தித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நிர்மலா வெளியிட்டுள்ளதில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியை வகித்து வருவது மட்டுமில்லாமல், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் ஓபிஎஸ்ஐ சந்திக்க மறுத்த நிர்மலா சீதாராமன் அதே கட்சியை சார்ந்த எம்பி வேணுகோபாலை நேற்று சந்தித்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...