கருணாநிதி இல்லத்தில் ஓ.பி.எஸ்!

ஜூலை 26, 2018 623

சென்னை (26 ஜூலை 2018): கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருணாநிதி இல்லத்திற்கு வருகை புரிந்தார்.

கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் இருந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வேதனையடைந்தனர். இதுதொடர்பாக நேற்று பேட்டியளித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று வந்த பின் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைவர் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் கருணாநிதி இல்லத்துக்கு வருகை தந்தனர். கருணாநிதியின் வீட்டில் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தப்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கருணாநிதி நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். பத்திரிகையாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது திமுகவினர் வந்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். அதேபோல் தற்போது கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தோம். அவர் உடல்நலத்துடன் இருக்கிறார். இது அரசியல் பண்பாடான சந்திப்பு என்று தெரிவித்தார்.

முன்னதாக இன்று மாலை காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மு.கருணாநிதி அவர்களின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள் , செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...