கருணாநிதி காவேரி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்!

ஜூலை 28, 2018 699

சென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில், தொண்டையில் குழாய் மாற்றுவதற்காக காவேரி மருத்துவமனையில் கடந்த வாரம் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை முடிந்து உடனே வீடு திரும்பிய அவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் நலம் பற்றி விசாரிக்க, பல்வேறு கட்சி தலைவர்கள் அவரது இல்லத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். போனிலும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

தொடர் சிகிச்சை மூலமாக கருணாநிதியின் உடல் நிலை தேறி வந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்திற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் கருணாநிதியின் தனிமருத்துவர் கோபால் உள்பட 2 மருத்துவர்கள் வந்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சில மருத்துவர்களும் வந்தனர்.

இந்நிலையில் இன்று நள்ளிரவில் கருணாநிதி இல்லத்திற்கு ஸ்டாலின் அவரது இல்லத்திலிருந்து வந்தார், தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து அவசர ஆம்புலன்ஸ் வாகனம் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தது. இதனை அடுத்து தொடர் சிகிச்சைக்காக கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...