செல்போனில் ஆபாச படங்களை வைத்து பிழைப்பு நடத்தும் கயவனை வசமாக சிக்க வைத்த பெண்!

ஆகஸ்ட் 02, 2018 846

ராமநாதபுரம் (02 ஆக 2018): செல்போன் செயலி மூலம் பெண்களின் அந்தரங்க தகவல்களை திருடி பிழைப்பு நடத்தும் கயவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகில் உள்ள தாமரை ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் எம்சிஏ படித்து முடித்து விட்டு தனியார் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் டெக்னீசியனாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

தனது உறவுக்கார பெண்ணின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றுள்ளார் தினேஷ்குமார். அவரிடம் உறவுக்கார பெண், வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் அனுப்பிய ஸ்மார்ட் போனைக் கொடுத்து, அதில் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்து தருமாறு கேட்டுள்ளார். அந்த ஸ்மார்ட்போனில், டிராக் செய்யும் செயலியையும் பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார், அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவரது செயல்பாடுகளைத் தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்படுத்தியுள்ளார்.

அந்த உறவுக்கார பெண் தனது கணவருடன் பேசும் அத்தனை அந்தரங்க விவகாரங்களையும் தன்னுடைய மொபைல் ஆப் மூலம் லேப் டாப்பில் பதிவு செய்துள்ளார் தினேஷ்குமார். மேலும் அந்தப் பெண் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

இவற்றை வைத்துக்கொண்டு தான் யார் என்று தெரிவிக்காமல், அக்கா முறை என்று கூடப் பாராமல், அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணக்கும்படி வற்புறுத்தியுள்ளார். பணியாவிட்டால், அந்தரங்கக் காட்சிகளையும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக செய்வதறியாமல் தவித்த அந்தப் பெண், இந்த விவகாரத்தைத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார் அவர் கொடுத்த யோசனைப்படி, ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி, அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார் அதை உண்மை என்று நம்பிய தினேஷ்குமார், அங்கு வந்துள்ளார்.

அவரை பார்த்ததும் அந்த பெண்ணுக்கும், அங்கு மறைந்திருந்த அவரது உறவினர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் அவர் உறவுக்காரர் என்பது தெரியவந்தது.உடனடியாக தினேஷ்குமாரைப் பிடித்து விசாரித்தபோது அவன் தான் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆப் மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டியவர் என்பது தெரியவந்த நிலையில் அவரை தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்த போலீஸார், அவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கிருந்து 2 லேப்டாப், 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரது லேப்டாப்பில் இருந்து 80-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்கக் காட்சிகளும், 140-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, தினேஷ்குமார் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்த தேவிபட்டினம் போலீஸார் தினேஷ்குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...