காவேரி மருத்துவமனையில் குவிந்த திமுக தொண்டர்கள்!

ஆகஸ்ட் 06, 2018 2371

சென்னை (06 ஆக 2018): தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை அடுத்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

கடந்த 10 தினங்களாக காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பது சவாலாக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு கருணாநிதியின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டியுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

வயது முதிர்வு காரணமாக கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, உறுப்புகள் சீராக செயல்பட தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்த தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பு அதிகளவு குவிந்து வருகின்றனர். திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினரும் மருத்துவ மனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பரபரப்பு காணப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...