கருணாநிதியின் தற்போதைய நிலை UPDATE!

ஆகஸ்ட் 07, 2018 1244

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.

வயது முதிர்வின் காரணமாக தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 28-ம் தேதி இரவு முதல் சென்னை காவேரி மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். அதேபோல் பல்வேறு கட்சியின் தலைவர்கள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர், பிற மாநிலத் தலைவர்களும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதுகுறித்தப் புகைப்படங்கள் வெளியாகி தி.மு.க தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. இதற்கிடையே, நேற்று அவர் உடல்நலத்தில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மேலும், அவருக்கு மஞ்சள்காமாலை போன்ற நோய் தொற்றுகள் உள்ளதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், `வயது முதிர்வின் காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை ஒத்துழைப்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்துக்குப் பிறகு தெரியவரும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, 11-வது நாளாக இன்றும் கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார். இன்று அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனை முன்பு அதிகளவில் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், காலையிலேயே கனிமொழி, அவரது கணவருடன் மருத்துவமனை வந்துள்ளார். இதேபோல் மற்ற குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு வரத்தொடங்கியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...