அழகிரிக்கு அதிர்ச்சி கொடுத்த அன்பழகன்!

ஆகஸ்ட் 13, 2018 1257

சென்னை (13 ஆக 2018): அழகிரியை திமுகவில் சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என்று திமுக பொதுச் செயலாள க.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. செயற்குழு கூட்டம் முதன் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.

அதோடு தி.மு.க. மூத்த தலைவர்களுடன் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க.வில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண் டும் கட்சியில் சேர்க்க கோரிக்கைகள் எழுந்துள்ளது பற்றியும் பேசப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. அவர் தென்மண்டல பொறுப்பாளர் பதவியை விரும்பவில்லை என்றும் மாநில அளவில் முக்கிய பொறுப்பை எதிர்பார்ப்பதாகவும் உறுதி செய்யப்படாத ஒரு தகவல் பரவியது.

மேலும் மு.க.அழகிரி மகனுக்கு முரசொலி அறக்கட்டளையில் இடம் அளிப்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி இருந்தது.

மு.க.அழகிரி தரப்பிலும் மு.க.ஸ்டாலின் தரப்பிலும் சிலர் சந்தித்து இது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் வெளியான இந்த தகவல்கள் எதிலும் அடிப்படை உண்மை இல்லை என்று தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். மு.க.அழகிரிக்கு தி.மு.க.வில் மீண்டும் பதவி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த தி.மு.க. நிர்வாகிகள் உறுதிபட தெரிவித்தனர்.

மேலும் மு.க. அழகிரியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க ஆலோசனை நடப்பதாக வந்த தகவலை கண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என அவர் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் அழகிரி தரப்பு அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...